பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த வெற்றி : TTT சக்சஸ் மீட்டில் நெகிழ்ந்த ஜீவா

0
11

TTT திரைப்பட வெற்றி விழாவில் நெகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்த நடிகர் ஜீவாவுக்கு, அவரது தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான ஆர்.பி. செளத்ரி கன்னத்தில் முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.

நடிகர் ஜீவா நடிப்பில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ (TTT) படம், கடந்த 15ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை மலையாள இயக்குநரான நிதீஷ் சகாதேவ் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். படம் ஜனரஞ்சகமாக இருப்பதால், ரசிகர்கள் பலரும் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில்‎, படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள்‎ ஆர்கே செல்வமணி, லிங்குசாமி, கே.எஸ். ரவிக்குமார், சமுத்திரக்கனி, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள், ஜெய், பிரேம்ஜி, நடிகர் சமுத்திரக்கனி, மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி, நடிகை அபிராமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.‎

இயக்குனர் ஆர்.கே செல்வமணி மேடையில் பேசுகையில்,”கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ‘சிறை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது. இந்த ஆண்டு துவக்கத்தில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் வெற்றிப்படமாக உருவெடுத்துள்ளது. இந்த தயாரிப்பாளர் போல பல தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு தேவை. அப்பொழுதுதான் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும்” என்றார்.

தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் போது, “நேரமின்மை காரணமாக இந்த திரைப்படத்தை நான் இன்னும் பார்க்க முடியவில்லை. தம்பி ஜீவாவை பொறுத்தவரை, சண்டைக் காட்சி, காதல் காட்சி, சோகக் காட்சி அனைத்தும் சிறப்பாக நடிக்க கூடியவர். நல்ல கதையில் யார் நடித்தாலும் படம் ஓடும். டூரிஸ்ட் ஃபேமிலி, சிறை மாதிரி திரைப்படம் வருவது தமிழ் சினிமாவில் அருமை. இந்த படத்திற்கு நல்ல தலைப்பு வைத்து இருக்கிறார்கள்” என்றார்.

இயக்குனர் பார்த்திபன் பேசும் போது, “இந்த படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி, மன்னர் போல செயல் பட கூடியவர். யாருக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் எப்போதும் நினைத்து கொண்டு இருப்பவர். இவரைப் போன்ற தயாரிப்பாளர்கள் இருப்பது தமிழ் சினிமாவிற்கு கூடுதல் பெருமை சேர்க்கும்” என்றார்.‎‎‎

நடிகர் ஜீவா பேசியபோது, “‎எனக்கு தமிழ் இயக்குனர்கள் கொடுக்காத பெரிய வெற்றியை இந்தப் படத்தின் இயக்குனர் கொடுத்து உள்ளார்.‎ இந்த படத்துல நடிச்ச எல்லாரும் சூப்பரா அவங்களோட முழு உழைப்பையும் போட்டு இருக்காங்க. அதனாலதான் இந்த படம் வெற்றி பெற்றிருக்கு. இந்த நேரத்தில் இயக்குநர் நிதீஷ் சகாதேவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது அப்பா ஆர்.பி. செளத்ரி தான் தயாரிப்பாளர்களின் ரியல் ஓ.ஜி” எனக் கூறினார்.

அப்போது அவர் அருகே வந்த நடிகர் ஜீவாவின் தந்தையும், தயாரிப்பாளருமான ஆர்.பி செளத்ரி, “ஜீவா எனக்கு ஒரு BMW காரை கிப்ட் பண்ணி இருக்கான். அவனுக்கு நான் ஒரு கிப்ட் தரணும்” எனக் கூறி என ஜீவாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்து அவரை வாழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here