லாக் டவுன் – விமர்சனம்

0
11

கொரோனா காலகட்டத்தில் நடந்த உண்மைக் கதையை உண்மைக்கு நெருக்கமாக சொல்லி இருக்கிறார்கள். 2020 கால கட்டத்தில் பெருந்தொற்று காரணமாக, அதற்குமுன் கற்பனை செய்துகூடப் பார்த்திராத வகையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்ததை யார் தான் மறக்கக்கூடும்? கொடுமையான அந்த காலகட்டத்தில் தவிப்பும் துடிப்புமான ஒரு பெண்ணின் மனப் போராட்டத்தை நெஞ்சம் நெக்குருக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகி அனுபமா பரமேஸ்வரன், வேலையின் பொருட்டு தோழியின் அழைப்பை ஏற்று ஒரு விருந்து கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறார். அந்த விழாவில் வேலை உறுதி செய்யப்பட்ட மகிழ்ச்சியில் மது குடிக்க வேண்டிய கட்டாயம் நேர்கிறது. மது மயக்கத்தில் இருந்தவரை அங்குள்ள ஒரு அறையில் தங்க வைக்கிறார்கள். அங்கு தான் அவருக்குத் தெரியாமலேயே நடந்து முடிகிறது பாலியல் பலாத்காரம். இரண்டு மாதம் கழித்து தான் கர்ப்பமுற்றது தெரிந்து அதிர்ந்து போகிறார். பெற்றோருக்குத் தெரியாமல் கருவை கலைத்துவிட முடிவெடுக்கும் நாளில் தொடர்ந்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விடுகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? கருவை கலைக்க முடிந்ததா? நடந்த உண்மை பெற்றோருக்கு தெரிந்ததா? என்பதை விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.

நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் தனது கேரக்டரை உள்வாங்கி நடித்ததில் அந்த கேரக்டராகவே மாறிப் போய் இருக்கிறார். கொரோனாவின் போது கருவை கலைக்க தனது தோழியுடன் டாக்டர் டாக்டராக பார்த்து அவமானப் படும் போடும் இடங்களில் மனசை பிழிந்து விடுகிறார். எப்படி கர்ப்பம் தரித்தோம் என்று தெரியாமலும் அதிலிருந்து வெளியே வர முடியாமல் ஏற்பட்ட தடைகளினாலும் தவித்துப் போகும் காட்சிகளில் அந்தத் தவிப்பை நடிப்பால் பார்வையாளர்களுக்கும் கடத்தி விடுகிறார்.

நாயகியின் பெற்றோராக வரும் சார்லி -நிரோஷா நடுத்தரக் குடும்பங்களைப் பிரதிபலிக்கும் பெற்றோராக நடிப்பில் பளிச்சிடுகிறார்கள்.

பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், லொள்ளு சபா மாறன், விநாயகராஜ், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா என படத்தில் நிறையப் பேர். அத்தனை பேரும் தங்கள் கேரக் டர்களில் நின்று நிலைக்கிறார்கள். கொரோனா கால கட்டத்தின் அபாய சந்து பொந்துகள் வரை துல்லியமாக படம் பிடித்திருக்கிறது கே.ஏ.சக்திவேலின் கேமரா.

என்.ஆர்.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். காட்சிகளுக்கு பொருத்தமான கனமான பாடல்கள் மனதில் தேங்கி விடுகின்றன. பின்னணி இசை நாயகியின் ஒவ்வொரு நாள் தவிப்பையும் இம்மி பிசகாமல் நமக்குள் இடப் பெயர்ச்சி செய்து விடுகிறது. எழுதி இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.ஜீவா. இந்தக் கதையில் வரும் நாயகியின் வாழ்வா சாவா பிரச்சனை மட்டுமின்றி ஊரடங்கு காலத்தில் மக்களின் இக்கட்டான நிலையையும் கதைக்களத்தில் அழகுற இணைத்துக் கொண்டிருக்கிறார்.

அனுபமாவின் தோழியாக வரும் பிரியா வெங்கட் படபட பட்டாசாக பொரிந்து தள்ளி நம்மை கவர்கிறார். ஏமாற்றுப் பேர்வழியாக டாக்டருக்கு உதவும் கம்பவுண்டராக கொஞ்ச நேரமே வந்தாலும் மாறனின் காமெடி சீரியஸ் ஆக செல்லும் படத்தை கலகலப்பாக்குகிறது.

அனுபமாவுக்கு மாத்திரை தர யாருக்கும் அந்த கண்டிப்பான மெடிக்கல் ஷாப் இளைஞன் நம்மை கவர்கிறார். அதைவிட கருக்கலைப்பு செய்ய முன்வரும் அந்த டாக்டர் கதாபாத்திரமும் கடைசி பத்து நிமிடங்களில் நம்மிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது. நன்றாக நடித்திருக்கிறார்.

இந்த படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படம் பார்ப்பவர்களை என்ன நடக்குமோ என்கிற தவிப்புடன் அமர வைத்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here