ஒரு கருப்பு நிற பல்சர் பைக். அதில் யாராவது சவாரி செய்ய நினைத்தால் அவர்களுக்கு ஏழரைதான். குறிப்பாக ஆண் – பெண் ஜோடியாக சென்றால் கூடுதல் ஆபத்து. இந்த பைக்கை வைத்திருக்கும் வில்லன் ஆர்ஜை, வாட்டர் பிஸினஸ் செய்யும் மன்சூர் அலிகானிடம் தள்ளிவிடுகிறார். மன்சூர் அந்த பைக்கை ஹீரோ தினேஷுக்கு விற்கிறார்.
அந்த பைக் வந்ததிலிருந்து தினேஷுக்கு நடப்பதெல்லாம் ஏழரையாகவே இருக்கிறது. தன் காதலி ரேஷ்மாவை ஏற்றிக்கொண்டு ஆசையாக ரைடு போக நினைக்கும்போது விபத்தில் சிக்குகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த பைக்கிற்கு பின்னால் ஒரு கதை இருப்பதை அறிந்து கொள்ளும் தினேஷ், அதற்கான தீர்விற்காக போராடி வெல்வதே கதை. ஜல்லிக்கட்டு காட்சிகள் சிலிர்ப்பு. காளையை அடுக்கும் வீரனாக தினேஷ் அசத்தியிருக்கிறார். ரேஷ்மா, மதுனிகா என இரண்டு நாயகிகள். இருவருமே கண்ணுக்கு லட்சணம். ஒரு டூயட்டில் ரேஷ்மாவின் அழகு ஈர்ப்பு.

டார்க் காமெடி வகையறா கதாபாத்திரம் மன்சூருக்கு. படம் முழுக்க சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார். வில்லனாக ஆர்ஜையும் தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். காமெடி என்ற பெயரில் ஃபிராங்க் ஸ்டார் ராகுல் சில இடங்களில் ரசிக்க செய்திருக்கிறார்.
ஜல்லிக்கட்டு காட்சியில் தனது கைவண்ணத்தை காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஆறுமுகத்திற்கு பாராட்டுகள். இன்பாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
கதை எழுதி இயக்கியிருக்கிறார் முரளி கிரிஷ். இயக்குநர் ராஜேஷ் எம்மின் சீடரான இவர், குருவின் பாதையிலேயே காமெடி தூக்கலான கதையை தேர்வு செய்து இயக்கியிருக்கிறார். மண் சார்ந்த கருவை தொட்டதற்காகவே பாராட்டலாம். குறைந்த முதலீட்டில் குறுகிய நாட்களில் ஒரு படத்தை முடித்திருக்கும் திறமைக்கு சபாஷ்.



