தமிழக வெற்றிக் கழகத்தில் விரைவில் தொழிற்சங்கப் பிரிவு தொடக்கம்?

0
199

தி.மு.க., அ.தி.மு.க.வில் இருப்பது போல் த.வெ.க.விலும் தொழிற்சங்கம் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகமும் தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கான முன்னெடுப்புகளை தமிழக வெற்றிக்கழகம் மேற்கொண்டுள்ளது. தற்போது கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளை விஜய் முழு வீச்சில் செய்து வருகிறார். இதன்படி கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் அதிரடி திட்டங்களை த.வெ.க. தலைவர் விஜய் அடுத்தடுத்து அறிவித்து வருகிறார்.

கட்சி ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 120 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கட்சியில் புதிதாக சேருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிதாக கட்சியில் சேருவதற்கு பிரபலங்கள் பலர் கட்சி தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு வருகின்றனர்.

புதிதாக சேருபவர்களின் பின்னணி பற்றி கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி தகுதி வாய்ந்த நபர்கள் மட்டுமே கட்சியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். குற்றப்பின்னணி இருப்பவர்கள் கட்சியில் சேர அனுமதி இல்லை என்பதில் விஜய் உறுதியாக இருப்ப தாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கட்சி உள் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக பெரிய கட்சிகளைப் போல் த.வெ.க.விலும் மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, வழக்கறிஞர் அணி உள்பட 28 அணிகள் ஏற்கனவே இருக்கின்றன.

இந்நிலையில் தி.மு.க., அ.தி.மு.க.வில் இருப்பது போல் த.வெ.க.விலும் தொழிற்சங்கம் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. தொழிற்சங்கம் தொடங்குவதற்காக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துடன் ஆலோசனை நடத்தி வரும் விஜய் விரைவில் த.வெ.க.வில் தொழிற்சங்கம் தொடக்க விழாவுக்கான அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.

இதன்படி தமிழகம் முழுவதும் கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள 120 மாவட்டங்களிலும் தொழிற்சங்க புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here