நாயகன் ரஞ்சித், தான் வாங்கிய கடன் தொகையை விட அதிகமாக வட்டி தொகை கட்டியும், கோடிக்கணக்கில் பணம் கேட்டு கந்துவட்டி மாஃபியாவால் மிரட்டப்படுவதோடு, அவரது குடும்பத்தை வீட்டுக்காவலில் வைத்து, கடனை வசூலிக்க அவர்களை பலவழிகளில் துன்புறுத்துகிறது. கடன் பிரச்சனையை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் ரஞ்சித்துக்கு எதுவும் கைகொடுக்கவில்லை. இதற்கிடையே, சென்னையில் தொடர் கொலைகள் செய்யும் சைக்கோ கொலையாளி ஒருவர், போலீசிடம் இருந்து தப்பி ரஞ்சித்தின் வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் பதுங்கி விடுகிறார்.
இந்த நிலையில், கந்துவட்டி மாஃபியாவின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்க, பிரச்சனையில் இருந்து மீள்வதற்காக ரஞ்சித் இறுதியாக ஒரு முயற்சியை மேற்கொள்கிறார். அது என்ன ? அதன் மூலம் அவரது பிரச்சனை தீர்ந்ததா? இல்லையா ? , அவரது வீட்டுக்குள் பதுங்கியிருக்கும் சைக்கோ யார் ? என்பதை, பாதிக்கப்பட்டவர்களின் மனதை தொடும் விதத்திலும், கஷ்ட்டமில்லாமல் வாழ கடன் வாங்கி அதன் மூலம் ஏற்படும் விளைவுகளை எச்சரிக்கும் விதமாகவும் சொல்வதே ‘இறுதி முயற்சி’.
நாயகனாக நடித்திருக்கும் ரஞ்சித், கடன் பிரச்சனையால் நிம்மதி இழந்து தவிக்கும் குடும்ப தலைவன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஒரு பக்கம் கடனை அடைக்க பணம் புரட்ட முயற்சிப்பது, மறுபக்கம் குடும்பத்தின் நிலை எண்ணி வருந்துவது என்று காட்சி காட்சி சோகத்தை பிழிந்தெடுத்தாலும், பாதிக்கப்பட்டவர்களின் வலி மற்றும் வேதனையை தன் நடிப்பு மூலம் பார்வையாளர்களிடம் எளிதாக கடத்தி விடுகிறார்.
ரஞ்சித்தின் மனைவியாக நடித்திருக்கும் மெஹாலி மீனாட்சி, கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு. கணவன் நிலை மற்றும் சூழல் அறிந்து நடக்கும் மனைவியாக எதார்த்தமாக நடித்திருப்பவர், அளவான பேச்சு, இயல்பான உடல்மொழி என்று தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
கருணை இல்லாத மனிதராக கந்துவட்டி தாதாவாக நடித்திருக்கும் விட்டல் ராவ், அவரது தம்பியாக நடித்திருக்கும் புதுபேட்டை சுரேஷ், குற்றவியல் ஆய்வாளராக நடித்திருக்கும் கதிரவன், ரஞ்சித்தின் மகளாக நடித்திருக்கும் சிறுமி மெளனிகா, மகனாக நடித்திருக்கும் சிறுவன் நீலேஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சுனில் லாசரின் பாடல்கள் கதைக்களம் மற்றும் கதை மாந்தர்களின் வலிகளை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது. பின்னணி இசை திரைக்கதையில் இருக்கும் சோகத்திற்கு கூடுதல் சோகம் சேர்க்கிறது.
ஒளிப்பதிவாளர் சூர்யகாந்தி, எளிமையான கதையை எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஒரு வீடு, அதற்குள் இருக்கும் சில கதாபாத்திரங்களின் மன போராட்டங்களை மிக இயல்பாக காட்சிப்படுத்தி, கடன் பிரச்சனை எத்தகைய ஆபத்தானது என்பதை பார்வையாளர்களை உணர வைத்திருக்கிறார்.
எளிமையான கதை என்றாலும், திரைக்கதையில் வலிமை சேர்க்கும் வகையில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு கிளைக்கதையை முக்கிய கதையோடு சேர்த்து காட்சிகளை சுவாரஸ்யமாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் வடிவேல் விமல்ராஜ்.
எழுதி இயக்கியிருக்கும் வெங்கட் ஜனா, தற்போதைய காலக்கட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் கந்துவட்டி கொடுமைகளின் பின்னணியை தோலுரித்து காட்ட முயற்சித்திருக்கிறார்.
உண்மை சம்பவங்களுக்கு ஏற்ப, கதையை ஒரே வீட்டுக்குள் நகர்த்தி செல்லும் இயக்குநர் வெங்கட் ஜனா, அந்த வீட்டுக்குள் இருந்தபடியே நாயகனின் மனைவி எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், அதை பார்த்தும் எதுவும் செய்ய முடியாத கணவரின் நிலையையும் மிக அழுத்தமாக பதிவு செய்து பார்வையாளர்களை கலங்கடித்து விடுகிறார்.
சோகமான காட்சிகளும், மெதுவாக நகரும் திரைக்கதையும் படத்தை சற்று தொய்வடைய செய்தாலும், கந்துவட்டியால் பாதிக்கப்படும் முதலாளியும், முதலாளித்துவத்தால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்காக போராடும் கம்யூனிச போராளியையும் இணைத்து இயக்குநர் சொல்லியிருக்கும் தீர்வு பாராட்டும்படி உள்ளது.
மொத்தத்தில், ‘இறுதி முயற்சி’ நல்ல முயற்சி.






















