சென்னை: கரூர் சம்பவத்திற்கு பின்னர் கட்சியை காப்பாற்ற, பாஜகவுடன் விஜய் தரப்பு பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படியே போனால் விஜய், பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, “பாஜக விஜய்யோடு கூட்டணி வைத்துக் கொள்ள வாய்ப்பில்லை என்பது என்னுடைய புரிதல். விஜய்யை ஒரு கருவியாக பயன்படுத்தி, திமுக மற்றும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எதிராக அரசியல் செய்வது அவர்களின் நோக்கம். குறிப்பாக இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வாக்குகளை சிதறடிக்க வேண்டும். அதற்கு விஜய் பயன்படுவார் என்று பாஜக நம்புகிறது.
அதன் அடிப்படையில்தான் அவர்கள் காய்களை நகர்த்துகிறார்கள். தன் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக, என்று விஜய் அறிவித்த நிலையிலும் கூட கொள்கை எதிரி என்ற இடத்தில் பாஜகவை வைத்திருக்கிற நிலையிலும் கூட, வலிந்து விஜய் அவர்களுக்கு ஆதரவு தருவது இந்த அடிப்படையில்தான் என்று நான் கருதுகிறேன். அவரை கூட்டணியில் இணைப்பது, திமுகவுக்கு எதிராக நிறுத்துவது என்ற இரண்டும் முரண்பாடானது. விஜய் அவர்களை சுதந்திரமாக சிந்திக்கவும் செயல்படவும் அவர்களே அனுமதிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் பாஜகவால் இன்னும் காலூன்ற முடியாத நிலையில், அவர்கள் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பிற மாநிலங்களில் அவர்களுடைய சித்து வேலைகள் எடுபடுகின்றன. தமிழ்நாட்டில் எடுபடவில்லை. அதற்காக பலரை தங்களின் பிரதிநிதியாக வெவ்வேறு முகமூடிகளை போட்டுவிட்டு இறக்கி விடுகிறார்கள். இது யூகமான ஒன்று அல்ல, இதுதான் உண்மை” என்று விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்திருந்தார்.
அதேபோல ஆளுநரின் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “ஆளுநரின் கூற்று அதிர்ச்சடைய கூடிய ஒன்று அல்ல. அவர் வழக்கமாக திரும்பத் திரும்ப இப்படியே பேசி வருகிறார். இது வழக்கமான ஒன்றுதான் வாடிக்கையான ஒன்றுதான். நீதிமன்றமே அவரை கண்டிக்கும் அளவுக்கு அவர் அதிகார வரப்புகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். முதலமைச்சர் அவர்கள் ஆளுநருக்கு உரிய பதிலடி கொடுத்திருக்கிறார். ஆளுநர் இது போன்று அரசியல் பேசுவதை கைப்பிடுவார் என்று நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.
















