ஹரி நிஷாந்த் அபாரம் : திருச்சி அணிக்கு 180 ரன்கள் வெற்றி இலக்கு

0
156

சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது.

கோவை,

9-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஸ்டேடியத்தில் 5-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த சூழலில் இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 7-வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதி வருகின்றன. அதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி சேலம் ஸ்பார்டன்ஸ் அணிசார்பில் முதலாவதாக ஹரி நிஷாந்த் மற்றும் கேப்டன் அபிஷேக் ஆகியோர் களமிறங்கினர்.

இந்த ஜோடியில் அபிஷேக் 10 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய விவேக் 2 ரன்னும், கவின் 3 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஹரி நிஷாந்த், சன்னி சந்து ஜோடி அதிரடியில் கலக்கியது.

இந்த ஜோடியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹரி நிஷாந்த் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 83 (58) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹரிஷ் குமார் 1 ரன்னும், அதிரடியாக ரன் சேர்த்த சன்னி சந்து 45 (27) ரன்களும், கவுரி சங்கர் 4 ரன்னும், ராஜகோபால் 11 ரன்னும் எடுத்து வெளியேறினர்.

இறுதியில் முகமது 8 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. திருச்சி அணியின் சார்பில் அதிகபட்சமாக அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதனைத்தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here