காசாவில் நிவாரண பொருட்கள் வாங்கச்சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு – பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

0
214

இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நீடித்து வருகிறது

காசா முனை,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.

பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 58 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை , இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துளனர். இந்த போர் ஓராண்டுக்குமேல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

போரால் காசா முனையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. காசாவுக்கு பல்வேறு நாடுகள் நிவாரண பொருட்கள் அனுப்பி வருகின்றன. இந்த நிவாரண பொருட்களை அமெரிக்க தொண்டு நிறுவனம் காசாவில் விநியோகித்து வருகிறது.

இந்நிலையில், காசாவின் ரபாவில் நேற்று நிவாரண பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. அப்போது, அங்கு ஏராளமான பாலஸ்தீனியர்கள் குவித்தனர். அப்போது, மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் முதற்கட்டமாக 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

நிவாரண பொருட்களை கொள்ளையடிக்க கொள்ளை கும்பல்களும் காசாவில் செயல்பட்டு வருகிறது. அதேவேளை, இந்த துப்பாக்கி சூடு நடத்தியது இஸ்ரேல் படையினரா? ஹமாஸ் ஆயுதக்குழுவினரா? கொள்ளை கும்பலா? என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here